காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து நதிகள் இவ்வூரில் செல்வதால் 'ஐயாறு' என்ற பெயர் பெற்றது. அதனால் மூலவர் 'ஐயாறப்பர்' என்றும் 'பஞ்ச நதீஸ்வரர்' என்றும் வணங்கப்படுகின்றார். சுசரிதன் என்னும் அந்தணனை எமதர்மன் பாசக்கயிற்றை வீச வர, இறைவன் வெளிப்பட்டு அந்தணனை ஜோதி வடிவமாக ஆட்கொண்டு அருளினார். அதனால் நுழைவாயிலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதிக்கு எதிரில் சிறு குழி ஏற்படுத்தி குங்கிலியம் போட்டு வழிபடுகின்றனர்.
மூலவர் 'ஐயாறப்பர்', 'பஞ்ச நதீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். இத்தலத்தில் இறைவன் தம்மைத் தாமே பூஜித்துக் கொள்வதாக ஐதீகம். மூலவர் சுயம்பு மூர்த்தியாதலால் ஆவுடைக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அம்பிகை 'அறம் வளர்த்த நாயகி', 'தர்மசம்வர்த்தனி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
திருநாவுக்கரசர் கயிலாயத்திற்குச் சென்றபோது சிவபெருமான் முதியவர் வேடம் தாங்கி எதிரில் வந்து, இங்குள்ள நீர்நிலையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தால் அங்கு இறைவனின் கைலாய தரிசனம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். அப்பரும் அவ்வாறே செய்ய, கைலாய தரிசனம் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று இரவு இந்த நிகழ்வு பெரிய விழாவாக நடத்தப்படுகிறது. அப்பர் எழுந்த குளம் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது.
சுந்தரர், சேரமான் பெருமானுடன் இத்தலத்திற்கு வரும்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் இறைவனை வேண்ட, அவரும் காவிரியில் வெள்ள நீரைத் தடுத்து வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் முதன்மையான தலம். திருப்பழனம், திருவேதிகுடி, திருசோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருமழபாடியில் நந்தி தேவர் திருமணத்திற்கு ஐயாறப்பர் எழுந்தருளுவார். அதன் தொடர்ச்சியாக சித்ரா பௌர்ணமி அன்று புதுமணத் தம்பதிகளை வரவேற்கும் நிகழ்ச்சியே சப்தஸ்தானத் திருவிழா.
மகாலட்சுமி இத்தலத்தில் தவம் செய்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
நந்திதேவர், இந்திரன், வாலி ஆகியோர் இத்தலத்து பெருமானை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமானை பாடியுள்ளார்.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகையர் வாழ்ந்த தலம். அவர் வாழ்ந்த வீடும், சமாதியும், கோயிலிலிருந்து சிறிது தொலைவில் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் 4 பதிகங்களும், திருநாவுக்கரசர் 12 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மணிவாசகரும் தமது திருவாசகத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுகின்றார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|